19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் கெவின் கொத்திகொட, வித்தியாசமான முறையில் பந்துவீசி தென்னாபிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் போல் அடம்ஸை  போல் அசத்துகிறார்.

இலங்கை அணியில் சுழல்பந்து வீச்சாளர்கள் பலர் சாதனைகளை படைத்துள்ளனர். முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ் மற்றும் ரங்கன ஹேரத் தங்கள் பாணியில் பந்துவீசி  சாதனைகளை படைத்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டி தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை அணி மோதிய போது கெவின் கொத்திகொடவின் பந்துவீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தென்னாபிரிக்காவின்  முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் போல் அடம்ஸ் பந்து வீசுவது போல் கெவின் கொத்திகொடவும் பந்து வீசுகிறார். இடது கை பந்துவீச்
சாளரான இவர், காலி மகிந்த கல்லூரியின் அணி வீரர் என்பதுடன், அந்த அணி உள்ளூர் போட்டியொன்றில் கிண்ணத்தை வெல்லவும் காரணமாக இருந்தார்.

இவரது பயிற்சியாளராகத் திகழும் இலங்கை ஏ அணியின் முன்னாள் பயிற்சியாளர் தம்மிக சுதர்ஷன கூறுகையில்; கெவினின் பந்து வீச்சு வழமைக்கு மாறாக இருக்கிறது. தென்னாபிரிக்காவின் போல் அடம்ஸ் வீசுவது போல் தலையை கவிழ்த்து முதுகுக்கு மேலாக பந்து வீசுகிறார்.

ஆரம்பத்தில் இவரால் இவ்வாறு பந்துவீசுவது கடினமாக இருந்தது. கடுமையான பயிற்சியைத் தொடர்ந்து துடுப்பாட்ட வீரர்களுக்கேற்ப அவர்களுக்கு சரியான இலக்கில் பந்தை வீசி அவர்களை தடுமாற வைக்கிறார்.

தற்போது இவர் சிறந்த பந்துவீச்சாளராகி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இவரது பந்து வீச்சுப் பாணி மிக வித்தியாசமாக இருந்தாலும் சிறந்த வீரராக இலங்கை அணிக்குள் புகக்கூடிய வாய்ப்பு கிட்டுமென தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)