இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இந்திய கிரிக்கெட் சபை தலைவர் அணிக்குமிடையே நடைபெற்ற இரு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை சார்பில் 14 வீரர்கள் பந்துவீசி புதிய சாதனையொன்றை படைத்துள்ளனர்.

இந்தியா சென்றுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில்,  இருநாள் பயிற்சிப் போட்டி சனிக்கிழமை ஆரம்பமானது.

இதில் முதலில் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளுக்கு 411 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதையடுத்து, இரண்டாம் நாள் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய இந்திய தலைவர் அணி ஓரளவு சிறப்பாக ஆடியது.  அணித் தலைவர் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி சதமடித்தார். இவரை ஆட்டமிழக்கச் செய்ய இலங்கை அணியினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதற்காக அணியின் மேலதிக வீரர்கள் உட்பட விக்கெட் காப்பாளரைத் தவிர 14 வீரர்கள் பந்து வீசியுள்ளனர். இதுவொரு சாதனையாகவும் கருதப்படுகிறது. 75 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், ஆகக் கூடுதலாக லக்ஷன் சந்தகன் 10 ஓவர்களை வீசினார்.

இந்திய தலைவர் அணி ஐந்து விக்கெட்டுக்கு 287 ஓட்டங்களை எடுத்திருந்த போது இரு அணிக் கப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால் இந்தப் போட்டி வெற்றி  தோல்வியின்றி முடிவடைந்தது.

(Visited 6 times, 1 visits today)