இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களை வெளியேற்றும் மண்டலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இத்தீவுக்கு உயர்மட்ட எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

எரிமலை சீற்றம் அதிகரித்துள்ளதால், பாலியின் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா வாசிகள் பலர் பயணம் செய்ய முடியாமல் அங்கேயே சிக்கியுள்ளனர்.

மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் (11,150 அடி) வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்பட்டது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

‘பேரழிவுக்கான சாத்தியமும், உடனடி ஆபத்தும் இருப்பதினால்’, ஞாயிறன்று நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இரவில் தீக்கதிர்கள் அதிகளவில் காணப்பட்டன. இது ஒரு பெரிய வெடிப்புக்கான சாத்தியக்கூறை காட்டுகிறது” என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பல் விழுந்துள்ள பகுதிகளில், அதிகாரிகள் முகமுடிகளை விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், மலையை சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தின் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அகுங் எரிமலையின் மேற்பரப்பின் அருகே உள்ள பாறைகள் உருகுவதாகவும், அடர் தீக்குழம்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மற்றும் எரிமலை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனீசியாவின் பேரிடர் மட்டுப்படுத்துதல் நிறுவனத்தின், தகவல்தொடர்பு இயக்குநர், மட்டாரமில் உள்ள லோம்போக் நகரில் சாம்பல் மழை பெய்ததாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“எரிமலை வெடிப்புகளை கணிப்பது கடினமான ஒன்று என்பதால், எந்த மாதிரியான சூழ்நிலை வரும் என்பதை கூற முடியாது” என அடிலைட் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர் மார்க் டிங்கேய் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இந்த வெடிப்புகள் மிகப் பெரியதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். காலப்போக்கில் ஒப்பீட்டுப் பார்க்கையில் இது சிறிய வெடிப்பாகவும் இருக்கலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை காலை வரை பாலி விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்றும், அதுவரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.

அருகில் உள்ள லாம்போக் தீவின் விமான நிலையம் திங்கட்கிழமை காலையன்று மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு, 1.4 லட்சம் மக்கள் வெளியேறியதை தொடர்ந்து, தற்காலிக தங்குமிடத்தில் இன்னும் 25 ஆயிரம் மக்கள் தங்கியிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளதால், மேலும் பெரிய வெடிப்பு ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது.

இத்தகைய பெரிய வெளியேற்றங்களின் போது, சுற்றுலா மூலம் தீவிற்கு கிடைக்கவேண்டிய பொருளாதாரத்தில் 110 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தோனேஷிய தீவில் தீவிர நிலையில் 130 எரிமலைகள் உள்ளன.
1963ஆம் ஆண்டு, கடைசியாக அகுங் மலை சீற்றமடைந்த போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

(Visited 21 times, 1 visits today)