அமெரிக்க செனட் சபை புதிய வரவு செலவுத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கு தவறியிருக்கும் நிலையில், இவ்விடயம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் முன்வைத்து வரும் நிலையில், இதன் காரணமாக அரசாங்க சேவைகள் முடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் வாரங்களுக்கு தேவையான வரவு செலவுத் திட்டத்திற்குரிய செனட் அனுமதியை அரசாங்கம் பெறத் தவறியிருக்கும் நிலையில், இந்தக் குழப்பநிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவுக்குள் 60 செனட் சபை வாக்குகளை புதிய வரவு செலவுத் திட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குகளைப் பெற செனட் சபை தவறியிருக்கும் நிலையில், பாரிய இழுபறி அங்கே ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியினர் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸின் 2 சபைகளிலும் மத்தியஸ்த பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை , முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திங்கட்கிழமைக்கு முன்னதாக இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான அனுமதி கிடைக்கப் பெறுமென்று வெள்ளை மாளிகையின் வரவு செலவுத் திட்ட தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அந்த அனுமதியை பெறத் தவறும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் பல்வேறு அரசத் திணைக்களங்களும் தமது சேவைகளை முற்றாக முடக்குவதற்கான நிலை ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு நெருக்கடி நிலையேற்பட்ட சந்தர்ப்பத்தில் 16 நாட்களுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன.

(Visited 27 times, 1 visits today)