பதுளை நிருபர்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தான் வகித்த கல்வி அமைச்சுப் பதவியை , விசாரணைகள் முடியும்வரை இராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாகாண கல்வி அமைச்சராகிய எனது பெயருக்கு களங்கத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தியமை தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் மா அதிபரிடமும் செய்யப்பட்டிருக்கும் புகார்களை பக்கச்
சார்பின்றி விசாரணை செய்வதற்கு வசதியாக மாகாண கல்வி அமைச்சு பதவியை தான் இராஜினாமா செய்துள்ளதாகவும் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

முதலமைச்சர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு அழைப்பித்து அவரை நிந்தித்து, மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வைத்தமையின் எதிரொலியாகவே இந்த இராஜிநாமா இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, முதலமைச்சர் பேசுகையில்;

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய சம்பவம் குறித்து எனது பெயருக்கும் எனது அரசியல் பயணத்திற்கும் பெரும் களங்கமும் , மாசும் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து எனக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்கு 500 மில்லியன் ரூபா கோரி வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அத்துடன் எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பதுளை பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் மா அதிபருக்கும் முறையிட்டுள்ளேன். இவ்விசாரணை பக்கச் சார்பின்றி நடைபெற வேண்டும். இந்த விசாரணைகள் நிறைவுறும் வரை, நான் வகிக்கும் மாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்கின்றேன்.

இந்த இராஜிநாமாக் கடிதங்கள் ஊவா மாகாண ஆளுனர் எம்.பி. ஜயசிங்க, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கும் நேற்று அனுப்பியுள்ளேன். இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றேன்.

மத்திய வங்கியில் பெரும் கொள்ளையில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது. இக்கொள்ளையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டிருப்பது நாடறிந்த உலகறிந்த விடயம்.

ஆகையினால் அவர் தனது பதவியை துறக்க வேண்டும். அவர் பதவி துறந்த மறு நிமிடம் நானும் மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்துவிடுவேன் என்றார்.

(Visited 20 times, 1 visits today)