இலங்கை, தென்னாபிரிக்க நாணயங்கள் சேதுக்கரையில் மாணவர்களால் மீட்பு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளை இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
இலங்கை தாளிப்பனை காசுகள், இலங்கை காசு 1 சதம் ஒன்றும் அரைச் சதம் இரண்டும் கிடைத்துள்ளன. இவை கி.பி. 1901, 1912, 1926 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவை.இவற்றின் ஒரு பக்கத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.மறுபக்கத்தில் தாளிப்பனை மரம் உள்ளது.
அதன் அருகில் காசின் மதிப்பு தமிழிலும், சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் அரை என்னும் பின்னம் பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் உள்ளதைப் போன்ற தமிழ் எண்ணுருவில் உள்ளது. தாளிப்பனை இலங்கையில் அதிகம் காணப்படும் பனை மர வகை ஆகும். இவை வட்ட வடிவச் செப்புக் காசுகள் ஆகும்.
1 பென்னி காசு தென்னாப்பிரிக்க ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, கி.பி. 1941 இல் ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்டது.
இதில் மன்னர் மற்றும் பாய்மரக் கப்பலின் படங்கள் உள்ளன. இது பெரிய அளவிலான வட்ட வடிவ வெண்கலக் காசு ஆகும்.
Leave a Reply