பதுளை நிருபர்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பெண் அதிபரை, மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக, 23 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

மேலும், இவ்விவகாரம் குறித்து ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை விசாரணைக்குட்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் சுசில் பிரேம
ஜயந்தவும் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் பாதிக்கப்பட்ட அதிபர் சார்பாக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தமக்கு களங்கத்தினை ஏற்படுத்தியவர்களுக்கெதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி மான நஷ்ட வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகவும், அது குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

19.01.2018 இல் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், மேற்படி விவகாரம் தொடர்பாக பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை சந்திக்கும் முகமாக , வித்தியாலயத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அதிபர் தனக்கேற்பட்ட நிலையினை கண்ணீர் மல்க பாராளுமன்ற உறுப்பினரிடம் விளக்கினார். அதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ் உயர் அதிகாரி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரையும் வித்தியாலயத்திற்கு அழைப்பித்து, விசாரணைகளை மேற்கொண்டார்.

கடந்த 3.1.2018 இல் ஆண்டு 1 வகுப்பிற்கான அனுமதி தொடர்பில் முதலமைச்சரின் கோரிக்கையை அதிபர் நிராகரித்தமையினால், அதிபரை முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவழைத்து அதிபரை நிந்தித்தமை, அதிபர் மண்டியிட்டு மன்னிப்பு கோரியமை ஆகியன குறித்து, அதிபர் கண்ணீர் மல்க விளக்கினார்.

அப்போது அவர், நான் அச்சுறுத்தப்பட்டதினால், ஊடகங்களுக்கு நடந்த சம்பவத்தை முற்றாக மாற்றி அப்படியொன்றும் நடக்கவில்லையென்று தெரிவித்தேன்.

அன்று நடந்த சம்பவம் எனது மனநிலையினை வெகுவாகப் பாதித்துவிட்டது. எனக்கும் எனது பாடசாலைக்கும் களங்கம் ஏற்பட்டதை எண்ணி மனதிற்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கின்றேன்.

எனது நிலை குறித்து மக்கள் பிரதிநிதிகள் எவருமே, எனக்கு ஆறுதல் கூற முன் வரவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மட்டுமே வித்தியாலயத்திற்கு வந்து சம்பவத்தைப் பற்றி வினவினார். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

இவ் வேளையில், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெலவிற்கும் வித்தியாலய அதிபர் ஆர்.பவானிக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றன.

மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் வித்தியாலய அதிபரை நிந்தித்தமை, மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை ஊர்ஜிதமாகியதினால், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வித்தியாலயத்தில் இருந்தவாறே ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கையடக்கத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதுடன், இடம்பெற்ற சம்பவக் காணொளிகளையும் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து , பிரதமரின் பணிப்பின் பேரில் வித்தியாலய அதிபர், மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்களை 23 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு சமுகம் தருமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சுகளின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இருந்து வருவதினால், அவர் தலைமையில், பிரதமரின் முன்னிலையில் வித்தியாலய அதிபருக்கும் மாகாண முதலமைச்சருக்குமான விவகாரம் விசாரணை செய்யப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அங்கு உரையாற்றுகையில், ‘மாகாண முதலமைச்சருக்கும் எனக்குமிடையே தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை. சமூகம் என்ற ரீதியில், நான் சமூகத்துடன் இருக்க வேண்டும். இன்று வித்தியாலய அதிபர் பவானிக்கு இவ்வாறு நடக்கலாம். நாளை எமது சமூகத்தின் பிறிதொருவருக்கு நடக்கலாம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தனக்கு ஏற்பட்ட அநீதிகளை அதிபர் அடக்கி வைத்துக்கொண்டிருந்துள்ளார். நான் வித்தியாலயத்திற்கு சென்று அவரிடம் வினவியதும், என்மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையினால் அனைத்து விடயங்களையும் கண்ணீர் மல்கக் கூறினார். இதையடுத்து அதிபருக்கு அச்சுறுத்தல் ஏதும் இடம்பெறும் என்பதால் அவருக்கு பாதுகாப்பினை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்.

எனக்கு எனது சமூகமே முக்கியம். அதனால், இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, அதிபருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பேன். சம்பவத்தையடுத்து அதிபர் பெரும் மன உளைச்சலில் உள்ளார். 23.01.2018 இல் நடக்கும் விசாரணையின் பின்னர், ஊவா மாகாண சபையில் மாற்றமொன்று ஏற்படுவதுடன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் பதவிகளுக்கும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும், அதிபருக்கு ஏற்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து கண்டனப் பேரணியொன்றை நடத்த முன்வரவேண்டும். அப் பேரணிக்கு நானே தலைமையும் தாங்குவேன்‘ என்றார்.
பதுளை மாநகரிற்குட்பட்ட பகுதியில் முஸ்லிம் மகளிர் பாடசாலை உள்ளிட்ட மூன்று பாடசாலைகள் இருந்து வரும் வேளையில், முஸ்லிம் பெற்றோர் ஒருவர் தனது பிள்ளையை பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆண்டு 1 இல் அனுமதிப்பதற்கு மாகாண முதலமைச்சரான கல்வி அமைச்சரை நாடியுள்ளார்.

அதையடுத்து, முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரின் கடிதத்துடன், அம் முஸ்லிம் பெற்றோர் மேற்படி வித்தியாலயத்திற்கு சென்று, அதிபரிடம் கடிதத்தைக் கொடுத்து, தமது பிள்ளையை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.

குறிப்பிட்ட வகுப்பிற்கு போதியளவு பிள்ளைகளை அனுமதித்திருப்பதால், புதிதாக அனுமதிப்பதற்கு இயலாமலிருப்பதாகவும் அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளில் எவராவது வராதிருந்தால், புதிய பிள்ளையை அனுமதிப்பதாகவும் அதிபர் கூறியுள்ளார்.

அதிபரின் இவ்விளக்கம் முதலமைச்சருக்கு திரித்துக் கூறப்பட்டதினால், முதலமைச்சருக்கு ஆத்திரம் மேலிட்டுள்ளது. இதையடுத்து, அதிபரை முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவழைத்து, நிந்தித்தமை மற்றும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.

03012018 இல் நடைபெற்ற மேற்படி விவகாரம் கசியத் தொடங்கியதும் இரு வாரங்கள் வரை பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர், முதலமைச்சரினால் நிந்திக்கப்பட்டமை மற்றும் மண்டியிட்டு மன்னிப்புக் கோரியமை எதுவுமே வெளிவரவில்லை.

வித்தியாலய அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதும், தான் நிந்திக்கப்படவுமில்லை, மண்டியிட்டு மன்னிப்பு கோரவுமில்லை என்றே கூறிய வேளையில், ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்ணவிடமும், கெபே தேர்தல் கண்காணிப்புக் குழுவிடமும் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து, ஊவா மாகாண சபை அமர்வின் போது, சபை உறுப்பினர்களான எம். சச்சிதானந்தன், சமந்த வித்தியாரட்ண ஆகியோர் குறிப்பிட்ட விவகாரம் குறித்து பிரஸ்தாபித்து, மாகாண முதலமைச்சருடன் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு, சபையில் பெரும் அமளி, துமளி இடம்பெற்று, சபை அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது. மனித உரிமை ஆணையகத்திற்கும் அதிபரினால், இச்சம்பவம் முறையிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்படுத்தியிருந்தார். அச் சந்திப்பின் போது, முதலமைச்சர் ஊடகவியலாளர்களிடம் வித்தியாலய அதிபர் நிந்திக்கப்படவுமில்லை. அதிபர் மண்டியிட்டு மன்னிப்புக் கோரவுமில்லை என்ற விளக்கத்தை வழங்கி, அது தொடர்பான காணொளியும் காட்டப்பட்டது.

அன்றைய தினம், மீளவும் வித்தியாலய அதிபரை சந்தித்த வேளையிலும் முதலமைச்சரின் கருத்தினை உறுதிப்படுத்திய அதிபர், இவ்வகையில் கூறி தன்னை கேவலப்படுத்துகின்றனர். இத்தோடு இதனை விட்டு விடுங்கள் என்று கூறி அமைதி காத்து வந்தார்.

இரு வாரங்களுக்குப் பின், வித்தியாலய அதிபர் ஆர். பவானி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸிடம், தான் முதலமைச்சரினால் கடுமையாக நிந்திக்கப்பட்டதையும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெலவின் உத்தரவிற்கமைய, முதலமைச்சரின் காலடியில் மண்டியிட்டு மன்னிப்பு கோரியதாகவும் அப்பொழுதும் முதலமைச்சரின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களினால் நிந்திக்கப்பட்டதையும் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளையில் போட்டியிடும் வேட்பாளரொருவரின் பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பது தொடர்பாகவே, மேற்படி சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பதுளை மாநகரில் இருந்து வரும் ஒரேயொரு தமிழ் மகளிர் பாடசாலையும் ஏற்பட்ட இப்பிரச்சினை குறித்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நீண்ட மௌனத்தையும் கடைபிடித்து வந்தனர்.

ஊவா மாகாண சபையில் ஒரு அமைச்சர் உட்பட ஐந்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களுமாக 7 பேர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்து வருகின்றனர். அப்படியிருந்தும் எவருமே 10 தினங்களாக வாய் திறக்கவில்லை.

ஆனால், மாகாண சபையில் ஜே.வி.பி உறுப்பினராக சமந்த வித்தியாரட்ண மட்டுமே, பாதிக்கப்பட்ட அதிபரும் குரல் கொடுத்தார். இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸினால் தான் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

(Visited 21 times, 1 visits today)