நாட்டில் திறமையற்றதாக நல்லாட்சி அரசாங்கம் இருப்பதைப் போன்றே திறமையற்ற எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் இருப்பதாக தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாக்களிக்கும் பொதுமக்கள் இதனை விளங்கிக் கொண்டு இவ்விரு கட்சிகளையும் நிராகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை வகித்திருந்த ஜே.வி.பி. திறமையற்ற நிர்வாகத்தைக் கொண்டிருந்ததாகவும் அதேபோன்று தமிழ்க் கூட்டமைப்பு வசமிருக்கும் வடமாகாண சபையிலும் அத்தகைய திறமையின்மையே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 50 எம்.பி.க்கள் கொண்ட கூட்டு எதிரணியை அங்கீகரிக்க ஐ.தே.க சபாநாயகர் மறுத்திருந்தார் என்றும் 16 எம்.பி.க்கள் கொண்ட தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை வழங்கியதுடன் 6 எம்.பி.க்கள் கொண்ட ஜே.வி.பி.க்கு பிரதம எதிர்க்கட்சிக் கொறடா பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி வருடம் தோறும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கூட்டு எதிரணி வாக்களிக்கும் நிலைமை இந்த நாட்டில் இருந்து வருகின்றது.

பாராளுமன்றத்திற்கும் வெளியேயும் அரசாங்கத்தை எதிர்ப்பதும் கூட்டு எதிரணியே. இதனை ஐ.தே.க. வின் சபாநாயகர் பரிசீலனைக்கு எடுப்பதில்லை. எப்போதுமே அரசாங்கத்திற்கு ஆதரவளித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுடன் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒத்துழைப்புடன் இயங்கி வருகின்றது.

அதுவே பிரதான எதிர்க்கட்சியாக கருதப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் உள்ளடங்கிய மிகவும் பலம் வாய்ந்த தேசிய நிறைவேற்று பேரவையுள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற உடனடியாகவே நாட்டை நிர்வகிப்பதற்கு அமைச்சரவைக்கும் மேலாக அந்தப் பேரவை அமைக்கப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் உறுப்பினர்களை விசாரணை செய்யவும், சிறையில் அடைப்பதற்குமான நோக்கத்துடன் பிரதமரின் தலைமையின் கீழ் ஊழலுக்கு எதிரான குழு அமைக்கப்பட்டது.

ஜே.வி.பி.க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்த ஏற்பாட்டில் மீண்டும் முன்னணி வகிபாகங்கள் அளிக்கப்பட்டன. உதாரணமாக இந்த ஊழலுக்கு எதிரான குழுவின் அவசர பதிலளிக்கும் பிரிவு ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்ப நாட்களில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பொலிஸாரின் செயற்பாடுகளை தம்வசம் எடுத்துக் கொண்டு பலதரப்பட்ட அரசாங்க கட்டிடங்களில் முன்னைய அரசாங்கத்தினால் தவறாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களை தேடுதல் நடத்தினார்கள்.

இந்த நடவடிக்கை எவ்.சி.ஐ.டி.யின் கீழ் முறையாக உருவாக்கப்பட்ட போது ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஊழலுக்கு எதிரான குழுவில் தொடர்ந்தும் செயற்பட்டனர். அதனை புதிய பொலிஸ் பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.
இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஜனநாயக விரோத நடவடிக்கைகள் யாவற்றிற்கும் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் ஆதரவளித்து வருகின்றன.

2017 ஆகஸ்டில் புதிய உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற அவர்கள் அரசுக்கு ஆதரவளித்திருந்தனர். அரசியலமைப்புக்கு முரணான வகையிலும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான வகையிலும் அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

குழுநிலையில் திருத்தங்கள் மூலம் முழுமையாக புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னைய உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திலுள்ள சில நுட்ப ரீதியான தவறுகளைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றத்தில் 3 ஆவது வாசிப்பின் போது சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 ஆவது வாசிப்பின் போது விவாதத்திற்கு எடுக்கப்படாத சட்டமூலமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பகிரங்கமாக புதிய உள்ளூராட்சி தேர்தல் முறைமையை ஜே.வி.பி. புகழ்ந்தும் நியாயப்படுத்தியும் உள்ளது. 2017 செப்டெம்பரில் மீண்டும் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு உதவியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான 2/3 பெரும்பான்மையை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு உதவியுள்ளது. அந்தக்கட்டத்திலும் குழுநிலையின் போது திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

மாகாண சபைகளுக்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க என்று அர்த்தப்படுத்தப்பட்ட அந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் குழுநிலையில் கொண்டுவரப்பட்டிருந்தன.

சில நாட்களுக்கு முன்னர் நல்லாட்சி ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை 5 இலிருந்து 6 வருடங்களுக்கு நீடிக்க முயற்சித்திருந்தார். இதற்கு எதிராக ஜே.வி.பி.யோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கவில்லை.

இது அவர்களின் விசுவாசங்களை காண்பிக்கின்றது. ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளிலேயே நல்லாட்சி ஜனாதிபதி அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

1971 இலிருந்து ஜே.வி.பி.யின் இலக்கு அரசாங்கத்தை அழிப்பதாகும். நாட்டை குழப்ப நிலையில் கொண்டுவருவதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அதன் மூலம் கைப்பற்றுவதாகும். 1971 இல் ஆயுதங்கள் மூலம் அரசாங்கத்தை வெளியேற்ற அவர்கள் முயற்சித்திருந்தனர். அந்த அரசாங்கம் பதவியேற்று அச்சமயம் 9 மாதங்களே சென்றிருந்தது.

இதன் விளைவாக 10 ஆயிரம் இளைஞர்கள் மரணமடைய நேரிட்டது. 1987 1989 கிளர்ச்சியின் போது 60,000 பேரின் மரணத்திற்கு ஜே.வி.பி. காரணமாக அமைந்தது.
1987 89 இல் தற்போதைய மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி.யினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 9 1/2 சுதந்திர சமஷ்டி அலகுகளாக இலங்கையை பிளவுபடுத்தும் உத்தேச புதிய அரசியலமைப்புக்கு இன்று அவர்கள் எதிர்ப்பைக் கொண்டிருக்கவில்லை.

அதிகாரத்திற்கு வருவதற்கு அவர்களுக்கான அனுமதிச் சீட்டாக நாட்டை துண்டாடுவதிலிருந்து ஏற்படும் விளைவாக இது அமையக் கூடுமென அவர்கள் கருதக்கூடும். 1987 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது தெற்கிலுள்ள இராணுவ முகாம்களை ஜே.வி.பி.யினர் தாக்கியிருந்தனர்.

முழு இராணுவமும் வடக்கில் குவிந்திருந்தபோது அவர்கள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தெற்கில் ஆயுதங்களை சேகரித்தனர். ஆயுதப் படைகளினதும் பொலிஸாரினதும் உறுப்பினர்களை அவர்கள் கொன்றனர். ஆயுதப் படைகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்வதன் மூலம் புலிகளுக்கு அப்பால் கூட அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

1987 89 இல் ஜே.வி.பி.யின் 2 ஆவது கிளர்ச்சியின் போது அதன் பிரதான தலைவர்கள் காடுகளில் ஒளிந்திருக்கவில்லை. அநேகமான கெரில்லா இயக்கத் தலைவர்கள் போன்று செல்வச் செழிப்பு மிக்க பெருந்தோட்ட முதலாளிமார் மற்றும் வர்த்தகர் போன்ற போர்வையில் சௌகரியமான வாழ்க்கையை வாழ்ந்தனர்.

வர்த்தகத்துறையிலிருந்தும் வங்கிகளிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தங்கத்தின் மூலம் அவர்கள் அவ்வாறு வாழ்ந்தனர். இப்போதும் மக்கள் முன்னிலையில் ஜே.வி.பி. எம்.பி.க்கள் ஊழலற்றவர்களாக, அப்பாவி அரசியல்வாதிகளாக இந்நாட்டில் பிறந்தவர்களாக நிற்கின்றனர்.

தமிழ்க் கூட்டமைப்பும் தனது பங்கிற்கு எனது அரசாங்கத்தினால் புலிகள் அழிக்கப்படும்வரை பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. போன்ற அமைப்புகள் அதிகளவுக்கு பேசக்கூடும். ஆனால் நிர்வாகத்தில் தோல்வியே கண்டுள்ளன.

2004-2005 இல் ஜே.வி.பி. சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் 4 அதிகாரம் மிகுந்த அமைச்சுப் பொறுப்புகளை கொண்டிருந்தன. விவசாயம், காணி, நீர்ப்பாசனம், கால்நடைஅமைச்சு அநுரகுமார திஸாநாயக்கவாலும், பிமல் ரட்ணாக்காவினாலும் நிர்வகிக்கப்பட்டன. உமாஓயா திட்டத்தை 2005 ஜனவரி 4 இல் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தவர் அமைச்சர் திஸாநாயக்கவாகும்.

2004 2005 இல் ஜே.வி.பி.யின் நிர்வாகம் அவர்களின் 4 அமைச்சுகளில் இடம்பெற்றதுபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை நிர்வாகமும் ஒத்ததாக அமைந்திருந்தது.

வாக்களிக்கும் பொதுமக்கள் இந்த நாட்டில் திறமையற்ற நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு சமாந்தரமாக திறமையற்ற நல்லாட்சி எதிரணி என்பவற்றையே நாம் கொண்டுள்ளோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்களால் இவை இரண்டும் நிராகரிக்கப்பட வேண்டும்.

(Visited 38 times, 1 visits today)