நாட்டின் பொருளாதாரத்தை பொறுப்பேற்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது தேசிய பொருளாதார பேரவையை அதிகளவிற்கு நாட்டின் பொருளாதாரத்திற்காக பயன்படுத்துவதற்கு மட்டுமே என அவர் வலியுறுத்தி தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கேகாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது தேசிய பொருளாதாரத்தை தான் பொறுப்பேற்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும், ஜனாதிபதியின் அந்தக் கருத்துக் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தவிடயம் குறித்து போகொல்லாகமவில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் ஜனாதிபதியுடன் தான் கதைத்திருந்ததாகவும், தேசிய பொருளாதாரத்தை தான் பொறுப்பேற்கப் போவதாக கூறியதன் உண்மையான அர்த்தம் குறித்து ஜனாதிபதி தன்னிடம் விளங்கப்படுத்தியிருந்ததாகவும் ஹர்ச டிசில்வா குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்புக்களை எடுத்துக் கொள்வதென அது அர்த்தப்படாதென ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளதாக ஹர்ச டி சில்வா தெரிவித்திருக்கிறார்.

ருவிட்டரில் பிரதியமைச்சர் ஹர்ச டிசில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தேசிய பொருளாதாரத்தை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்ததையடுத்து தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பங்காளிகளான ஜனாதிபதியின் தலைமையிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் விரிசல் மேலும் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவற்றை அமத்திவாசிப்பதாக ஐ.தே.க. அமைச்சரின் கருத்து அமைந்திருக்கின்றது.

(Visited 21 times, 1 visits today)