ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்ததாக புகார் கூறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நேற்று பஜனை ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோயிலில் இருந்து புறப்பட்ட பஜனை ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் தலைமை வகித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஆண்டாளை விமர்சித்த வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். இதை வலியுறுத்தி நான் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினேன்.

போராட்டத்தின் 2 ஆம் நாளில் அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால், ஒரு நிபந்தனையுடன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்.

எங்களது நிபந்தனைப்படி, பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் ஆண்டாள் கோயிலில் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால், நானும் ஆண்டாள் பக்தர்களும் ஒன்று திரண்டு கோயில் முன் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவோம்.

ஆண்டாளுக்காக உயிரை விடவும் நாங்கள் தயாராக உள்ளோம்‘ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர்.

(Visited 32 times, 1 visits today)