ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்று ஆயுத தாரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த ஹோட்டல் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்திருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஹோட்டலை முற்றுகையிட்டிருந்த 3 ஆயுத தாரிகளும் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதுடன், 150 பேர் ஹோட்டலிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சனிக்கிழமை மாலை, காபூலிலிருக்கும் இன்ரகென்டினன்டல் ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் கிருனைற் தாக்குதல் மேற்கொண்டதுடன், அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஹோட்டலை ஆயுததாரிகளின் பிடியிலிருந்து மீட்டு விருந்தினர்களையும் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளில் விசேட அதிரடிப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தாக்குதல்களின் போது வெளிநாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 41 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் 4 ஆயுத தாரிகள் தாக்குதல்களை மேற்கொள்வதாக கூறப்பட்டது, பின்னர் 3 பேர் மாத்திரமே தாக்குதலில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தவொரு குழுக்களும் உரிமை கோரியிருக்கவில்லை. ஆனால், 2011 ஆம் ஆண்டில் தலிபான்கள் குறித்த ஹோட்டலை தாக்கியிருந்தனர். ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்கத் தூதரகம் அங்கிருக்கும் ஹோட்டல்களின் பாதுகாப்பு தொடர்பாக பயண எச்சரிக்கையொன்றினை விடுத்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

“தீவிரவாதக் குழுக்கள்’ காபூலில் இருக்கும் ஹோட்டல்களுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடுவதாக நாம் அறிந்திருக்கின்றோம் என அமெரிக்கத் தூதரகம் வியாழக்கிழமையன்று பாதுகாப்பு எச்சரிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. ஆனால், சர்வதேச விமானநிலையம் உட்பட முக்கியமான ஹோட்டல்கள் தாக்கப்படுமென அமெரிக்கா கூறியிருந்தது.

அத்துடன், பொதுக் கூட்டங்கள் , நிகழ்வுகள், அரசாங்கக் கட்டிடங்கள், சந்தைத் தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களை இலக்கு வைத்தும் தாக்குதலை மேற்கொள்வதற்கு குறித்த குழுவினர் திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா அந்தச் சந்தர்ப்பத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

(Visited 14 times, 1 visits today)