அமெரிக்க தடகள வீரரான கிறிஸ்ரியன் கோல்மேன் (21),
60 மீற்றர் உள்ளரங்கு ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கிலெம்சன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 60 மீற்றர் உள்ளரங்கு ஓட்டத்தில் பங்கேற்ற கோல்மேன், 6.37 நொடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.

கோல்ட்மேன் பந்தய இலக்கை 6.37 நொடிகளில் அடைந்தது, புதிய உலக சாதனையாகும். முன்னதாக, மற்றொரு அமெரிக்கரான ரிஸ் கிரினி 6.39 நொடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. கிரினி தனது அந்த சிறந்த நொடிகளை 2 முறை எட்டியிருந்தார்.

முதல்முறை 1998 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியிலும், பின்னர் 2001 ஆம் ஆண்டு ஜோர்ஜியாவில் நடைபெற்ற போட்டியிலும் அதே நேரக்கணக்கில் இலக்கை எட்டியிருந்தார்.

இதையடுத்து, சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை முறியடித்துள்ளார் கிறிஸ்டியன் கோல்மேன். எனினும், இந்த சாதனையை தடகள சம்மேளனங்களுக்கான சர்வதேச சங்கம் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

முன்னதாக, 60 மீற்றர் இலக்கை 6.45 நொடிகளில் எட்டியதே கோல்மேனின் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில்முறை தடகள வீரராக இந்த ஆண்டிலிருந்து களம் காணும் கோல்மேன், இது சிறப்பான தொடக்கம் என தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 100 மீற்றர் உலக சம்பியன்ஷிப்பில் கோல்மேன் வெள்ளி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)